அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கான அவசரச் சட்டம் இயற்றும்படி, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தான் கொண்டுவரப் போவதாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
பச்சான் சிங் தலைமையிலான விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களின் 25 பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்து இன்று புதுடெல்லியில் உள்ள பாஜக எம்.பி. மனோஜ் திவாரியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது ராமர் கோயில் கட்டிடப் பணிகளுக்கான ஒரு குறிப்பாணையை அவரிடம் வழங்கினர்.
இச்சந்திப்பிற்குப் பிறகு பாஜக எம்.பி. மனோஜ் திவாரி ஊடகங்களிடம் கூறுகையில், ''விஷ்வ இந்து பரிஷத் பிரதிநிதிகளிடமிருந்து இப்போதுதான் ஒரு குறிப்பாணையைப் பெற்றுள்ளேன். எனது கட்சியிலும் நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவேன் என்று நான் அவர்களிடம் உறுதியளித்துள்ளேன்'' என்றார்.
அப்போது, ''நாடாளுமன்றத்தில் அயோத்தி பிரச்சினைக்காக நீங்கள் தனிநபர் மசோதா கொண்டுவருவீர்களா?'' என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மனோஜ் திவாரி, ''தேவைப்பட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட, தனிநபர் மசோதா தாக்கல் செய்வதற்கான முதல் நபராக நான் இருப்பேன். ஏனெனில், 1528லிருந்தே கடந்த 490 ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை நிலுவையில் இருந்து வருவதை அறிந்து எனக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது'' என்றார்.
''நீதிமன்றத்தைப் பொறுத்தவரை 1950லிருந்தே ராமர் கோயில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோயில் கட்டும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதோடு நீதிமன்றம் மேலும் மேலும் நீட்டித்துக்கொண்டே செல்கிறது. எனவே, திவாரிஜி அவர்களிடம், நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப வேண்டுமென்பதற்கான ஒரு குறிப்பாணையையும் நாங்கள் அளித்துள்ளோம் என்று பச்சான் சிங் தெரிவித்தார்.
அயோத்தி மாநாடு
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் விஷ்வ இந்து பரிஷத் கூட்டிய மாநாடு நடைபெற்றது. இதில் 2 லட்சம் பேர் திரண்டனர். ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டவேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்றாலும் இப்போது அக்கோரிக்கை கடுமையாக வலுவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.