அந்தமானில் உள்ள நார்த் சென்டில் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலனின் உடலை மீட்க மானுடவியலாளர்கள் உதவியை காவல்துறை கோரியுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 35 மைல் தொலைவில் இருப்பதுதான் நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவைச் சுற்றி 5 நாட்டிகல் மைல்வரை மனிதர்கள் செல்ல மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவில் உள்ள பூர்வீகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள். அவர்கள்வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இந்நிலையில் அந்தத் தீவுக்கு போலீஸார், கடற்படையினர் கூட செல்ல அச்சப்படும் சூழலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் என்பவர் சில தினங்களுக்கு முன்பு சென்றார். அவரை பழங்குடி மக்கள் அம்பெய்து கொன்று கடற்கரையில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இறந்த ஜான் ஆலன் கிறிஸ்தவ மிஷனரி எனவும், பைபிளுடன் தீவுக்கு சென்றதாகவும் அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலை மீட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கைகளை அவர்கள் செய்து வருகின்றனர்.
ஆனால் ஆலன் உடலை மீட்பது பெரும் சவாலாக உள்ளது. நார்த் சென்டினல் தீவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன், அமெரிக்கர் உடலை மீட்கச் சென்ற கடற்படையினரை நோக்கி சென்டினல் பழங்குடிமக்கள் வில் அம்பு மூலம் குறிவைத்ததால், அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள்.
இதனால் அவரது உடலை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. சென்டினல் பழங்குடிமக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அமெரிக்கர் உடலை மீட்க வேண்டும் என்று ஒருபிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ஆலன் உடலை மீட்க வேறுறொரு முயற்சியை அந்தமான் அதிகாரிகளும், காவல்துறையினரும் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அந்தமான் போலீஸ் டிஜிபி தீபேந்திர பதக் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை அன்று நாங்கள் ஒரு படகில் சென்றோம். எங்களுக்கு உதவியாக சில மீனவர்களும் வந்தனர். கடற்கரைக்கு சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு பைனாகுலர் மூலமாக சென்டினல் பழங்குடி மக்களின் நடவடிக்கையை பார்த்தோம். உடனடியாக அவர்கள் எங்களை நோக்கி அம்புகளை எய்தனர். ஆனால் நாங்கள் பதிலுக்கு துப்பாக்கியால் சுடவில்லை.
மாறாக மேலும் சற்று தூரம் தள்ளி சென்றோம். அங்கிருந்தடி அவர்களை நாங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். அவர்களும் அங்கிருந்து செல்லாமல் கண்ணை இமைக்காமல் அப்படியே எங்களை பார்த்தபடி இருந்தனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என நாங்களும் கவனத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தோம்.
இருந்தாலும், அங்கே செல்ல முடியவில்லை. நீண்டநேரம் முயன்றும் முடியவில்லை. திரும்பி வந்துவிட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு மானுடவியல் ஆய்வாளர்கள் அங்கு சென்று பழங்குடி மக்களிடம் அன்பாக பேசி பழகி தகவல்களை சேகரித்துள்ளனர்.
எனவே நாங்கள் அதே மானுடவியல் ஆய்வாளர்களை தொடர்பு கொண்டுள்ளோம். பழங்குடி மக்களிடம் நட்புடன் பழகுவது குறித்து அவர்களிடம் கேட்டு தகவல்களை பெறவுள்ளோம்.
ஒருவேளை சம்மதித்தால் அவர்களையும் அழைத்துக் கொண்டு நார்த் சென்டினல் தீவுக்கு செல்ல பரிசீலித்து வருகிறோம். அவ்வாறு அவர்கள் வந்தால் அமெரிக்கர் ஆலனின் உடலை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.