இந்தியா

போலிச் சான்றிதழ் அளித்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஏபிவிபியில் இருந்து நீக்கம்

ஆர்.ஷபிமுன்னா

போலிச் சான்றிதழ் அளித்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர், அகில பாரத வித்ய பரிஷத் (ஏபிவிபி) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தமிழகத்தின் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் போலிச் சான்றிதழை சமர்ப்பித்திருந்தது விசாரணையில் உறுதியாகி உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு மாணவராக இருந்தவர் அங்கிவ் பல்சோயா. இவர், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அதில் அங்கிவ், காங்கிரஸின் மாணவர் அமைப்பான என்எஸ்யூஐயின் வேட்பாளரை விட இருமடங்கு வாக்குகளுடன் வெற்றி அடைந்தார்.

இதையடுத்து அங்கிவின் பட்டப்படிப்புகளை ஆராய்ந்த எதிரணியினர், அது போலியானது எனப் புகார் எழுப்பினர். இதன் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினால், அங்கிவ் மீது பல்கலைக்கழகமும் விசாரணைக் குழு அமைத்தது.

இதில், அங்கிவ், தமிழகத்தின் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் தாம் இளங்கலைப் பட்டம் பெற்றதாக போலிச் சான்றிதழ் அளித்திருந்தது தெரிய வந்தது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அங்கிவின் சான்றிதழ் போலியானது என உறுதி செய்திருந்தார்.

எனவே, அங்கிவ் மீது நடவடிக்கை எடுத்த ஏபிவிபி அவரை அமைப்பின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளது. இதனால், தனது மாணவர் பேரவைப் பொறுப்பில் இருந்தும் அங்கிவ் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இதனால், அங்கிவ் வகித்த தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை டெல்லி பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனினும், மாணவர் தேர்தல் மீதான லிங்டோ ஆணையம் பரிந்துரையின்படி மறுதேர்தலுக்கான 60 நாட்கள் கடந்து விட்டது.

இதனால், அதன் துணைத்தலைவரே தலைவராக பொறுப்பு வகிப்பார் எனத் தெரிகிறது. இது, ஏபிவிபிக்கு சாதகமான செயல் என டெல்லி பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மீது, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT