மக்களவை தேர்தல் முடிவு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வாக்குவங்கி அரசியலுக்கு நாட்டுமக்கள் விடை கொடுத்துள்ளனர் என பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் பொறுப்பை அமித் ஷாவிடம் வழங்குவதாக ராஜ்நாத் சிங் முறைப்படி அறிவித்தார்.
பின்னர் பாஜக தேசியத் தலைவராக முதல் உரையாற்றிய அமித் ஷா: மக்களவை தேர்தல் முடிவு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வாக்குவங்கி அரசியலுக்கு நாட்டு மக்கள் விடை கொடுத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் தான் ஒரு சாதாரண தொண்டர் கட்சியின் தேசியத் தலைவராகவும், தேசத்தின் பிரதமராகவும் உருவெடுக்க முடியும். பாஜக-வை இன்னும் பில மாநிலங்களில் மிகவும் வலுப்படுத்த வேண்டிய நிலை. அவ்வாறு கட்சியை வலுப்படுத்தாவிட்டால் பாஜக ஆட்சியில் தொடர்வதில் சிக்கல் ஏற்படும் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை இல்லை:
முன்னதாக, பேசிய ராஜ்நாத் சிங் தேசியத் தலைவராக தனது பதவிக் காலத்தில் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் பணிகளை மேற்கொண்டதாக கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் கொள்கையும், தொண்டர்களும் கொண்ட ஒரே கட்சி பாஜக மட்டும்தான். காங்கிரஸ் கட்சிக்கு கொள்கை என்பதே இல்லை. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றிக்கு காரணம் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கும், அமித் ஷா போன்ற தலைவர்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் சிறப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டதே ஆகும்.
அமித் ஷா தேசியத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்த போது பல்வேறு கேள்விகள் வெளியில் இருந்து எழுப்பப்பட்டன. ஆனால், மக்களவை தேர்தலில் உ.பி.யில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜகவும் 2 தொகுதிகளை பாஜகவின் கூட்டணி கட்சியும் பிடித்தன. இதற்குக் காரணம் அம்மாநில பாஜக பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டதே. இது ஒன்றே போதுமானது அவரை கட்சியின் தேசிய தலைவராக நியமிப்பதற்கு என கூறினார்.