இந்தியா

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய ராணுவத் தளபதி

ஏஎன்ஐ

வடக்கு கமாண்டின் ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் காஷ்மீரில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவை நேற்று கொண்டாடினார்.

அன்புணர்வு மற்றும் நம்பிக்கை ஊட்டும் விதமாக இம்முயற்சி அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நேற்று (நவம்பர் 14 / புதன்கிழமை) நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் ராணுவத் தலைவர் (வடக்கு கமாண்ட்) லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவர் தன் மனைவியுடன் உதம்பூர் அரசு ராணுவப் பள்ளியில் பயிலும், தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்தார்.

இக்குழந்தைகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள். அதேவேளையில் பொருளாதார ரீதியாக நலிந்த பின்னணியும் கொண்டவர்கள்.

ராணுவத் தளபதி அக்குழந்தைகளுடன் நெருக்கமாக அமர்ந்து கலந்துரையாடினார். அவரின் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளும் அன்புணர்வு தழைக்கும் அணுகுமுறைகளும் குழந்தைகளுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்தது.

ஆபரேஷன் சதாவ்னா

பயங்கரவாதத்தால் கடும் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு என்று இந்திய வடக்கு ராணுவம் பிரத்யேக நல்வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த இருபது வருடங்களாக ராணுவத்தின் பிரதான திட்டமான 'ஆபரேஷன் சதா'வின் கீழ் பல்வேறு நல்வாழ்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது கல்வி சார்ந்து இயங்கிவரும் ஆர்மி பப்ளிக் ஸ்கூல் ஆகும்.

'ஆபரேஷன் சதாவ்னா' திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம் கல்வி, மருத்துவ உதவிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, விடுமுறை பயிற்சி மற்றும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு பல குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

'ஆபரேஷன் சதாவ்னா' தனது பங்களிப்பு மூலம் ராணுவம் மற்றும் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றை மேம்படுத்தும் கருவியாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT