சிபிஐ அமைப்பைப் பார்த்து யாரெல்லாம் அதிகமாக மறைந்து வாழ்கிறார்களோ, அவர்கள்தான் அச்சப்படுகிறார்கள் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வும் சிபிஐ அமைப்பு தங்கள் மாநிலத்துக்குள் எந்த விதமான விசாரணைக்கும் அரசின் முன் அனுமதியில்லாமல் வரத் தடை விதித்தனர். இதைச் சுட்டிக்காட்டி அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக தேர்தல் அறிக்கை போபால் நகரில் இன்று வெளியிடப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சவுகான் இருந்து வருகிறார். வரும் 28-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், தேர்தல் அறிக்கையை 10 நாட்களுக்கு முன்பாக பாஜக வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, முதல்வர் சிவராஜ் சவுகான், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இணைந்து கூட்டமாக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். இந்தத் தேர்தல் அறிக்கைக்கு திரிஷித்தி பத்ரா அல்லது தொலைநோக்கு அறிக்கை என்று பெயரிடப்பட்டிருந்தது.
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை
அந்தத் தேர்தல் அறிக்கையில் மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது. மேலும் பெண்கள், விவசாயிகள், குழந்தைகள், இளைஞர்கள், வர்த்தகர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சனிக்கிழமை வச்சன் பத்ரா என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்குப் பின் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஆந்திரா, மேற்கு வங்க அரசுகள் சிபிஐ அமைப்புக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து நிருபர்கள் கேட்டனர்.
சிபிஐயைப் பார்த்து அச்சப்படுகிறார்கள்
அதற்கு அருண் ஜேட்லி பதில் அளிக்கையில், ''யாரெல்லாம் சிபிஐ அமைப்பைப் பார்த்து அதிகமாக மறைந்து வாழ்கிறார்களோ அவர்கள்தான் சிபிஐ அமைப்புக்குத் தடை விதித்து என் மாநிலத்துக்கு வரக்கூடாது என்கிறார்கள். ஊழல் என்ற விஷயம் வரும்போது யாரும் இறையாண்மையைக் கூறி தப்பிக்க முடியாது.
ஆந்திராவைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வழக்கால் இந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. ஆனால், எதுவும் நடந்துவிடக்கூடாது என்று அஞ்சுகிறது. இந்த நேரத்தில் இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.
இந்தியாவில் கூட்டாட்சி கட்டமைப்பு இருக்கிறது, கூட்டாட்சி கட்டமைப்பில் நாம் வாழ்கிறோம். முதலில் சிபிஐ அமைப்பு மத்திய அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டு, பின் மாநிலங்களில் உள்ள மற்ற முக்கிய வழக்குகளை விசாரிக்கப் பயன்படுத்தப்பட்டு. அதுபோன்ற வழக்குகளை விசாரிக்க மாநில அரசுகளோ அல்லது நீதிமன்றமோ பரிந்துரை செய்யும்.
மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட், நராடா ஸ்டிங் ஆப்ரேஷன் போன்றவற்றை ஒருபோதும் எதிர்காலத்தில் அழித்து விடமுடியாது. சிபிஐ அதை விட்டுவிடாது'' எனத் தெரிவித்தார்.