கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டுகிறது, பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்மேற்கு பருவமழையின் போது, கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை, வெள்ளத்தால் பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கின. ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். ரூ.30 ஆயிரம் கோடிக்கு அதிகமாகச் சேதம் ஏற்பட்டதாகக் கேரள அரசு தெரிவித்தது.
இந்நிலையில், முதல் கட்டமாக மத்திய அரசிடம் இருந்து ரூ.600 கோடி நிதியுதவி மட்டுமே அளிக்கப்பட்டது அதன்பின் வழங்கப்படவில்லை என்று கேரள முதல்வர் பினராயி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தபோது கூறியது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவி அளிப்பதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது, நிதிகளை வழங்குவதிலும் தாமதம் செய்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிடம் இருந்து வெள்ள நிவாரண நிதியாகக் கேரள அரசு இதுவரை ரூ.600 கோடி மட்டுமே பெற்றுள்ளது. இதில் வெள்ள நேரத்தில் கேரள மாநிலத்துக்கு அரசியும், மண்எண்ணெயும் வழங்கியது மத்திய அரசு. அதற்காகக் குறைந்தபட்ச தொகையாக ரூ.265 கோடியை மத்திய அரசுக்கு நாங்கள் திருப்பி அளிக்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் எங்களுக்கு ரூ.350 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, உலகமே எங்கள் மீது இரக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்து வருகிறது.
உலக வங்கி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் கேரள மாநிலத்தின் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து, ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிட்டுள்ளனர். ஆனால், உண்மையான இழப்பு அதற்கு மேலும் இருக்கும்.
கேரள மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்ய மத்திய அரசின் உதவித் தவிர்க்க முடியாதது. ஆனால், போதுமான அளவு நிதியுதவி கிடைக்காததால் பெரும் சிக்கலாக இருக்கிறது.
மத்திய அரசின் நிதியுதவி மட்டும் கேரள மாநிலத்துக்கு மறுக்கப்படவில்லை, வெளிநாடுகளில் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகளையும் மத்திய அரசு பெறவிடாமல் தடுத்துவிட்டது. ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடி அளிப்பதாகக் கூறியபோதிலும் ஏற்கெனவே இருக்கின்ற கொள்கையை சுட்டிக்காட்டி, அதை வாங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
என்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் வெளிநாடு சென்று மாநில மறுகட்டமைப்புக்காக கேரள மக்களிடம் நிதியுதவி பெற மத்திய அரசிடம் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கும் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
தேசிய பேரிடர் நிதி வழங்குதல் விதிமுறைகள்படி, கேரள மாநிலத்துக்கு ரூ.,5,616 கோடி கிடைக்க வேண்டும், மேலும் சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி கேட்டிருந்தோம். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. அந்த நிதியுதவி கிடைத்தால், 490 மக்களின் உயிர் உள்ளிட்ட வெள்ளத்தால் இழந்த இழப்புகளை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.