கர்நாடக மாநிலத்தில் சென்றவாரம் நடைபெற்ற திப்புசுல்தான் பிறந்தநாள் விழாவில் நுழைந்து தகராறில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி உள்ளிட்ட ஐந்துபேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடகு மாவட்டத்தில் கடந்த 5ஆம் தேதி திப்பு ஜெயந்தியை ஒட்டி ஒரு பொதுநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின்போது ஆர்எஸ்எஸ் நிர்வாகி சுதாகர் ஹோசாஹாளி, உள்ளூர் பத்திரிகையாளர் சந்தோஷ் ஆகியோர் குறுக்கிட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் திப்பு சுல்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதோடு கூட்டத்தில் அப்போது, ''கர்நாடக அரசாங்கம் திப்பு ஜெயந்தியை விழாவாகக் கொண்டாடக்கூடாது'' என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சிதாபூர் ஆஸ்கர் என்பவர் கோணிகோபால் காவல்நிலையத்தில் சந்தோஷ், ஹோசாஹாளி, ராபர்ட் ரோஸாரியோ, ரங்காகார்மி கரியப்பா மற்றும் பச்சானியாண்டா அப்பானா ஆகியோர்மீது புகார் அளித்தார்.
இவர்கள் மீது போலீஸார் இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர். பலத்த பாதுகாப்புக்கிடையே கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாநில அளவில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.