இந்தியா

பண மதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டது ஏழைகள்; பயனடைந்தது பணக்காரர்கள்: ராகுல் காந்தி தாக்கு

செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் பெற்றது பணக்காரர்கள், பாதிக்கப்பட்டது ஏழைகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பிணையில் வெளிவந்தவர்கள் எனக்கு நற்சான்று அளிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மறைமுகமாக ராகுல், சோனியாவை நேற்று விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலடியாக ராகுல் காந்தி இன்று  பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 தொகுதிகளுக்கு முதல்கட்டத் தேர்தல் நேற்று முடிந்தது. 2-வது கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். முஹாசமுந்த் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

பிரான்ஸ் நாட்டில் இருந்து மத்திய அரசு வாங்க உள்ள 36 ரஃபேல் போர் விமானங்கள் மூலம் அனில் அம்பானியின் நிறுவனம்தான் பயன் அடையப்போகிறது. ஏழைகளிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து, அதை மிகப்பெரிய தொழிலதிபர் பாக்கெட்டில் மத்திய அரசு கொடுக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

வீடுகளில் மெத்தைகளுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை எல்லாம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வெளிக்கொண்டுவந்துவிட்டதாக மோடி தெரிவித்துள்ளார். அவர் சொல்வது சரிதான். ஆனால், அவர் யாரிடம் இருந்து பணத்தை கொண்டுவந்தார் என்பதைச் சொல்லவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஏழை மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி முன் நீண்டவரிசையில் நின்றனர். நாட்டில் எந்த கோடீஸ்வரர், பணக்காரராவது வங்கி முன் வரிசையில் நின்றார்களா. கோட்சூட் அணிந்த ஒருவர் வங்கி முன் வரிசையில் நின்றிருந்தார்களா.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை வெள்ளையாக மாற்றுவதற்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து பிரதமர் மோடி உதவியுள்ளார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT