இந்தியா

‘இந்தியா உங்கள் முன்னுரிமையா இல்லையா?’- காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் புகைப்படம்: சர்ச்சையில் நவ்ஜோத் சிங் சித்து

பிடிஐ

காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதத் தலைவர் கோபால் சிங் சாவ்லா, நவ்ஜோத் சிங் சித்துவுடன் தான் நிற்கும் புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட அகாலிதளத் தலைவர், “நவ்ஜோத்  சித்துவுக்கு இந்தியா முக்கியம் இல்லையா?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாப் அமைச்சராக இருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுடன் பாகிஸ்தான் சீக்கிய பிரபந்தக் கமிட்டித் தலைவரும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியுமான கோபால் சிங் சாவ்லா புகைப்படத்தை வெளியிட்டதோடு, கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டு விழாவின் போது சாவ்லா பாகிஸ்தான் ராணுவத் தளபதி குவாமர் ஜாவேத் பாஜ்வாவுடன் கைகுலுக்கும் புகைப்படமும் வெளியாகி சர்ச்சை இரட்டிப்பானது.

கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டல் நிகழ்ச்சியில் சித்து, லோங்கோவால், சார்னா ஆகியோர் கலந்து கொள்ள பாகிஸ்தான் சென்றது குறிப்ப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் பாதல், “அமிர்தசரஸ் பயங்கரவாதத் தாக்குதலில் கோபால் சாவ்லாவுக்குத் தொடர்புள்ளது. அது சித்துவின் தொகுதிதான். இவருடன் போய் கைகுலுக்குவது புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று நவ்ஜோத் சிங் சித்து நடந்து கொண்டால் அவருக்கு தேசம் பெரிதா அல்லது வேறு என்ன பெரிது என்பதை அவர் நாட்டு மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்து விவகாரத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பிருப்பது சித்துவுக்குத் தெரியும். நம் இளைஞர்களைக் கொலை செய்யும் பின்னணியில் ஜெனரல் பாஜ்வா இருக்கிறார், ஆனால் அவருடன் சித்து கைகுலுக்குகிறார்.

சித்துவை வைத்து காங்கிரஸ் கட்சி தன் பீடத்தை பாகிஸ்தானுக்கும் விரிவாக்கம் செய்யலாம்” என்று கடுமையாகச் சாடிஉள்ளார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் வெர்கா, “சுக்பீர் பாதல், பாதல் குடும்பம், பாஜக ஆகியவற்றுக்கு சித்து மோகம் உண்டாகியுள்ளது. பாபா குருநானக் தேவ் பெயரை விட அதிகம் சித்துவின் பெயரைத்தான் இவர்கள் உச்சரிக்கின்றனர். லோங்கோவாலுக்கு சாவ்லா பற்றி தெரியும், ஆனால் சித்துவுக்குத் தெரியாது” என்றார்.

ஆனால் இதற்கிடையே டெல்லி சீக்கிய கமிட்டியின் முன்னாள்  தலைவர் பரம்ஜித் சிங் சர்னா கூறும்போது காலிஸ்தான் ஆதரவு சாவ்லாவை சித்து பலமுறை தவிர்க்க முயன்றார். எப்படியோ அவர் சித்துவுடன் புகைப்படம் எடுக்க முடிந்துள்ளது என்கிறார். இவ்வாறாக சித்து மாற்றி மாற்றி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

SCROLL FOR NEXT