இந்தியா

பாஜகவின் ‘பி டீம்’ காங்கிரஸ்: பினராயி விஜயன் கடும் சாடல்

செய்திப்பிரிவு

கேரளாவில் பாஜகவின் ‘பி’ அணியாக காங்கிரஸ் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை. இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் இருப்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்தநிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநில மாநாட்டையொட்டி கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கொடிகள் இல்லாமல் கலந்து கொள்கின்றனர். இது வேதனைக்குரியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சபரிமலை தீர்ப்பை வரவேற்கிறார்.

ஆனால் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றனர். சபரிமலை தீர்ப்பு வெளியான போது முதலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.

மதவாத மோதல்களில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்கவில்லை. அந்த கட்சியில் இருந்து பலர் விலகி மதவாத சக்திகளுடன் கரம் கோர்த்ததை அந்த கட்சி எண்ணி பார்க்க வேண்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ‘பி’ அணியாகவே கேரள மாநில காங்கிரஸ் செயல்படுகிறது. பாஜகவின் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான விலையை கொடுக்கும் சூழல் ஏற்படும்.

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

SCROLL FOR NEXT