மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் என்னைப் பற்றியோ, என் அரசைப்பற்றியோ, சாதனைகள் குறித்தோ பேசியதில்லை. மக்களின் பிரச்சினைகளை, சமூகப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேசினேன் என்று மன் கி பாத் நிகழ்ச்சியின் 50-வது வாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய வானொலியில் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி மக்களிடம் பேசினார். அப்பேதுமுதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அவர் பல்வேறு சமூக பிரச்சினைகளை, மக்கள் குறித்தும், சாதித்த இந்தியர்கள், குறித்தும் நாட்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சியின் 50-ஆவது பகுதி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இன்று வானொலியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மன் கி பாத்தின் 50-வது பகுதி நிகழ்ச்சியில் உங்களுடன் பேசுகிறேன். மன் கி பாத் நிகழ்ச்சி தொடங்கும் போதே எந்தவிதமான அரசியல் குறித்தோ, எனது தலைமையிலான அரசின் சாதனைகள் குறித்தோ அல்லது என்னைப்பற்றியோ பேசக்கூடாது என்று தீர்மானமாக முடிவு எடுத்துவிட்டேன்.
அதன்படி, இதுவரை மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பற்றிமட்டுமே பேசினேன். என்னைப்பற்றியோ, அரசின் சாதனைகள் குறித்தோ பேசியதில்லை. வானொலி மூலம் கோடிக்கணக்கான மக்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்பதால், இதை ஊடகத்தைத் நான் தேர்வுசெய்தேன்.
மன் கி பாத் நிகழ்ச்சியை நான் ஒருபோதும் அரசியலுக்காக நான் பயன்படுத்தியதில்லை, என்னுடையஅரசின் சாதனைகளைப் பரப்பும் இடமாகவும் தேர்வு செய்யவில்லை.
ஒவ்வொரு மாதமும் மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், அவர்களிடம் இருந்து வரும் கடிதங்கள், ஆன்-லைன் மூலம் வரும் கருத்துக்கள், தொலைப்பேசி அழைப்புகள் ஆகியவற்றை வைத்துத்தான் முழுமையாகத் தயாரிக்கப்பட்டது என்பதை தெளிவாகக் கூறுகிறேன்.
ஏனென்றால், மோடி ஆட்சியில் இருக்கலாம், அல்லது ஆட்சியில் இல்லாமலும் போகலாம். ஆனால், நாடு ஒற்றுமை, நிரந்தரத்தன்மை, கலாச்சாரம் ஆகியவை எப்போதும் அழிவற்றது.
கடந்த 1998-ம் ஆண்டு பாஜகவில் தொண்டராக நான் இருந்தபோதில் இருந்து நான் வானொலியின் மகத்துவத்தை அறிந்துவந்துள்ளேன். ஆதலால்தான் வானொலியைத் தேர்வு செய்தேன். இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு தேநீர் கடை வைத்திருப்வர் கூட வானொலியின் மூலம் இந்தியா செய்த அணுகுண்டு சோதனை குறித்து செய்தி மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இன்றைய சூழலில் வானொலி மக்களிடத்தில் பரவியுள்ளதும், அதன் ஆழமும் எந்த ஊடகத்துடனும் ஒப்பிடமுடியாதது. அதன் வலிமையையும், சக்தியையும் உணர்ந்தவன். அதனால்தான் பிரதமராக நான் பதவி ஏற்றவுடன், மக்களிடம் தொடர்பு கொள்ள வலிமையான ஊடகமாக வானொலியைத் தேர்வு செய்தேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.