அயோத்தியில் வெளியாட்கள் நடமாட்டத்தால், முஸ்லிம்கள் கலவர அச்சம் அடைந்துள்ளதாக தெரிவித்த இக்பால் அன்சாரிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 25-ல் அயோத்தியில் தர்மசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தோழமை அமைப்பான விஎச்பி சார்பில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அயோத்தியில் மதக்கலவரம் ஏற்படுமோ என முஸ்லிம்கள் அச்சம் அடைந்துள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கின் பாபர் மசூதி தரப்பின் முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி கூறினார்.
அவருக்கு ஏற்கெனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அன்சாரியின் பாதுகாப்புப் பணியில் ஓர் உதவி ஆய்வாளர், நான்கு காவலர்கள், மறு உத்தரவு வரும் வரை ஈடுபடுவார்கள் என அயோத்யா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உ.பி. காவல்துறை இயக்குநர் ஓ.பி.சிங் கூறும்போது, “அயோத்தியில் அச்சம் அடைந்துள்ளவர்கள் யாராக இருப்பினும் உள்ளூர் காவல் நிலையத்தை அணுகினால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என்றார்.
இதனிடையில், அயோத்தியின் தர்மசபைக்காக ராம பக்தர்களைச் சேர்க்கும் பொருட்டு விஎச்பி உ.பி.யில் இருசக்கர வாகன ஊர்வலங்களை நடத்தி வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பேரை சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அயோத்தியில் நடைபெறும் அதே தினத்தில் நாக்பூர் மற்றும் பெங்களூரூவிலும் விஎச்பியின் தர்மசபை நடைபெற உள்ளது.