இந்தியா

பசுபதிநாத் கோயிலில் மோடி வழிபாடு

செய்திப்பிரிவு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வழிபாடு நடத்தினார்.

நேபாளத்தின் காசி என்று போற்றப்படும் பசுபதிநாத் கோயில், உலகின் மிகப் பெரிய சிவாலயங்களில் ஒன்றாகும். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பசுபதிநாத் கோயிலில் வழிபட்டார். காவி உடை, ருத்திராட்ச மாலைகள் அணிந்திருந்த அவர் சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார்.

இந்தக் கோயிலில் பூஜைக்காக தினமும் அரை கிலோ சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடி 2500 கிலோ சந்தன மரத் துண்டுகளை காணிக்கை யாக வழங்கினார்.

மோடியின் ட்விட்டர் பதிவு

ட்விட்டரில் மோடி வெளியிட்ட பதிவில், “பசுபதிநாத் கோயிலில் வழிபட்டபோது சிவபெருமானின் ஆசி நேரடியாகக் கிடைத்ததை உணர முடிந்தது” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கோயிலில் நேபாள மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர்களுடன் தரையில் அமர்ந்து பூஜை, வழிபாடுகளில் பங்கேற்க முடியும். அந்த கவுரவம் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.

தென்னிந்திய தலைமை அர்ச்சகர்

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான அர்ச்சகர்கள் உள்ளனர். இதில் தலைமை அர்ச்சகர் உள்பட 5 பேர் தமிழகம், கர்நாடகாவில் இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போதைய தலைமை அர்ச்சகர் கணேஷ், பிரதமர் மோடிக்கு கோயில் பிரசாதங்களை வழங்கினார்.

வழிபாட்டுக்குப் பிறகு கோயில் பதிவேட்டில் தனது கருத்துகளை எழுதிய மோடி, “காசி விஸ்வநாதர் கோயிலும் காத்மாண்டு பசுபதிநாத் கோயிலும் ஒன்றுதான். கோயிலில் சுவாமியை வழிபட்டபோது பரவச நிலையை உணர்ந்தேன். இந்த பந்தம்தான் இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT