இந்தியா

பிரபல பேஷன் டிசைனர் கொடூரக் கொலை: வேலை செய்த கூலியை தராததால் டெய்லர் ஆத்திரம்

செய்திப்பிரிவு

டெல்லியில் பிரபல பேஷன் டிசைனர் மாலா லகானியும் அவரது உதவியாளரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆடை தைத்துக் கொடுத்த பணத்தை மாலா கொடுக்காததால் அவரிடம் பணியாற்றிய தையல்காரர் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்துள்ளது.

தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் மாலா லகானி (வயது 53). பிரபல ஆடை வடிவமைப்பாளரான அவர், ஏராளமான ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் ராகுல் என்பவர் தையல்காரராகப் பணியாற்றி வந்தார்.

அவர் கொடுக்கும் டிசைனுக்கு ஏற்ப ஆடைகளை தைத்துக் கொடுத்து வந்த ராகுலுக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் மாலா லகானி நிலுவையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சரியாகப் பணியாற்றவில்லை எனக் காரணம் கூறி பணத்தைத் தராமல் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தனது நண்பர்கள் ரஹ்மத் மற்றும் பஷிருடன் மாலா வீட்டுக்குச் சென்றுள்ளார்.

தனக்கு தர வேண்டிய பணத்தை தருமாறு கூறித் தகராறு செய்துள்ளார். அப்போது பேச்சவார்த்தை முற்றி ராகுலும் அவரது நண்பர்களும் சேர்ந்து மாலாவைத் தாக்க முயன்றனர். அப்போது மாலாவின் உதவியாளர் பகதூர் உள்ளே புகுந்து தடுத்துள்ளார். அப்போது ராகுலும் அவரது நண்பர்களும், பகதூரைக் கத்தியால் குத்தியதுடன், மாலாவையும் தாக்கினர்.

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மாலாவும், பகதூரும் உயிரிழந்தனர். இதையடுத்து ராகுல் அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்து வந்த போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராகுல் மற்றும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

SCROLL FOR NEXT