குடிமைப் பணி தேர்வின் 2012-ம் ஆண்டு ஐஐஎஸ் (இந்திய தகவல் சேவை) அதிகாரியான அருண் குமார், சேலம் மாவட்டம், எளம்பிள்ளையைச் சேர்ந்தவர். மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர் பாளராக பணியாற்றி வருகிறார். கோவாவில் நேற்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்திகளை அலெக்ஸாவில் ஒலி பரப்ப அவர் அளித்த யோசனை பெரிதும் பாராட்டப்படுகிறது.
அமேசானின் அலெக்ஸா, கூகுள், மைக்ரோசாப்டின் கார் டானா, ஆப்பிள் நிறுவனத்தின் சிரி ஆகிய ஒலிபெருக்கிகள், மக்கள் கேட்பதை புரிந்து அதற்கேற்ப இணையத்தில் தேடி ஒலிபரப்பும் தொழில்நுட்பம் கொண்டவை. இந்த வகை, ஒலிபெருக்கிகளை வாங்கும் பொதுமக்களில் 65 சதவீதம் பேர் பாடல்கள் கேட்கவும், 50 சதவீதம் பேர் செய்திகளைக் கேட்கவும் பயன்படுத்துகின்றனர். எனவே தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அனைத்து செய்திகளையும் அலெக்சாவில் வெளியிட திட்ட மிடப்பட்டுள்ளது. இச்சேவை, வரும் காலங்களில் கூகுள் மற்றும் இதர ஒலிபெருக்கிகளிலும் இதர மொழி களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 2014-ல் அகில இந்திய வானொலி நிலையத் தில் அருண் குமார் பணியாற்றி னார். அப்போது, தலைப்பு செய்தி கள் மக்களின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக வழங்கும் சேவை இருந்தது. ஆங்கிலத்தில் மட்டும் இருந்த இந்த சேவையை தமிழ் உட்பட 22 மொழிகளிலும் குறுஞ்செய்தியாக அனுப்ப அருண் நடவடிக்கை எடுத்தது பெரிதும் பாராட்டப்பட்டது.
கடந்த 2016 முதல் 2018 வரை என பட்ஜெட் உரை தயாரிக்கும் குழுவிலும் அவர் பணியாற்றினார். ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப் பட்டு வந்த செய்தி வரைபடங்களை தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவர் வெளியிட்டார். ரயில்வே அமைச்சகத்தில் பணி யாற்றியபோது, கடந்த 2016-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் Google Hangouts ஐயும் அருண் முதன் முறையாக அறிமுகப்படுத்தினார்.
அதேபோல், Automation எனும் முறையை பயன்படுத்தி ரயில் துறை நிகழ்ச்சிகளுக்கான பத்திரிகையாளர்களின் அழைப்பிற் காக தேதி, நேரம், இடம், சந்திப்பின் காரணம் போன்ற தகவல்களை மட்டும் அளித்தால் தானாகவே, இமெயில், கைப்பேசி குறுஞ்செய்தி அனுப்பி பத்திரிகை தகவல் மையத்தின் இணைய பக்கத்திலும் பதிவேற்றம் செய்துவிடும்.
இதுபோன்ற யோசனைகளுக் காக தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அணுகுவது உண்டு. ஆனால், திருச்சி என்.ஐ.டி.யில் பொறியாளர் பட்டம் பெற்ற அருண் அப்பணிகளை தனது தனிப்பட்ட திறமையால் செய்து வருவதால் அவருக்கு பாராட்டு குவிகிறது.