இந்தியா

ஷியா வஃக்பு வாரியத் தலைவர் தயாரிப்பில் ‘ராமஜென்ம பூமி’ இந்தி திரைப்படம் வெளியாகிறது

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யின் ஷியா வஃக்பு வாரியத்தின் தலைவரான வசீம் ரிஜ்வி கதை மற்றும் தயாரிப்பில், ‘ராமஜென்ப பூமி’ எனும் பெயரில் ஒரு இந்தி திரைப்படம் வெளியாக உள்ளது. இது மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரச்சாரத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டி கடந்த 1990 ஆம் ஆண்டின் அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை கரசேவை நடைபெற்றது. அப்போது உ.பி.யில் இருந்த சமாஜ்வாதியின் முதல்வர், முலாயம் சிங் யாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டிருந்தார். இதில், 28 உயிர்கள் பலியாகின.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதிய வசீம் ரிஜ்வி, ‘ராம ஜென்ம பூமி’ எனும் பெயரில் ஒரு இந்தி திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இதன் டிரெய்லரை நேற்று லக்னோவில் ரிஜ்வி வெளியிட்டார்.

இந்த விழாவில் ரிஜ்வி பேசும்போது, ''எனது படம் எந்த ஒரு அரசியல் கட்சி, மதம் அல்லது அமைப்புகள் என யாரையும் விமர்சித்து எடுக்கப்படவில்லை. இதன் பெயரில் சில மவுலானாக்களும், பாகிஸ்தான் ஏஜெண்டுகளும் நம் நாட்டில் குலைத்து வரும் அமைதியை எடுத்துக் கூறி உள்ளேன்'' எனத் தெரிவித்தார்.

ரிஜ்வியின் இந்தி திரைப்படம் டிசம்பரில் நாடு முழுவதிலும் வெளியிடப்பட உள்ளது. இதில், ராமர் கோயிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சதானந்த சாஸ்திரியின் கதாபாத்திரம் நாயகனாகவும், வில்லனாக மவுலானா ஜபர் கான் எனும் பாகிஸ்தான் ஏஜெண்ட் பாத்திரமும் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தினை போஜ்புரி மொழித் திரைப்படங்களின் பிரபல இயக்குநர் சரோஜ் மிஸ்ரா இயக்கியுள்ளார். அவர், இதன் படப்பிடிப்பை உ.பி.யின் அயோத்தியில் எடுக்கும் போது, பல எதிர்ப்புகள் கிளம்பியதாகவும் ரிஜ்வி தெரிவித்தார்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட இந்துத்துவாவினருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருபவர் வசீம் ரிஜ்வி.

கோயில் கட்டுவதன் மீதான தனது நிலை குறித்து ரிஜ்வி கூறும்போது, ''அயோத்தியில் இருந்த கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்பதால் அதை மசூதி என அழைக்கக் கூடாது. ஷரீயத் சட்டப்படி பிரச்சனைக்குரிய நிலத்தில் மசூதியை கட்டக் கூடாது'' எனவும் தெரிவித்தார்.

வட இந்தியாவின் சில முஸ்லிம்கள் இடையே தவறாகக் கடைப்பிடிக்கப்படும் நிக்காஹ் ஹலாலாவையும் வசீம் ரிஜ்வி எதிர்த்து வருகிறார். இதனால், நிக்காஹ் ஹலாலா குறித்த சில காட்சிகளையும் தனது படத்தில் ரிஜ்வி இணைத்துள்ளார்.

இதனால், ரிஜ்வியின் திரைப்படம் மக்களவைத் தேர்தலில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும் எனக் கருதப்படுகிறது. இதற்கு உ.பி. முஸ்லிம்கள் இடையே கடும் சர்ச்சைகள் கிளம்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT