இந்தியா

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா

செய்திப்பிரிவு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டிசம்பர் 2-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2-ம் தேதியோடு முடிகிறது. இதையடுத்து, 23-வது தலைமைத் தேர்தல் ஆணையராக, 1980-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜைச் சேர்ந்த சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துவிட்டார் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 2-ம் தேதி ஓ.பி. ராவத் ஓய்வு பெறும் நாளன்று சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையும் சுனில் அரோரா அறிவிப்பார், மேலும், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் அரோரா தலைமையில் நடைபெற உள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையராக நஜீம் ஜைதி நியமிக்கப்பட்டவுடன் அவரின் இடம் காலியானது, அதை நிரப்பும் வகையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்கும் முன் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின்செயலாளராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தார். அதற்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தின் முதன்மைச் செயலாளராக சுனில் அரோரா இருந்தார். மேலும் ஏர் இந்தியாவின் தலைமை மேலாண் இயக்குநராகவும் அரோரா பதவி வகித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன, விரைவில் அறிவிப்பு வரும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT