இந்தியா

ஒரு ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர் சிஇஓ

செய்திப்பிரிவு

ட்விட்டர் பல பிரபலங்களை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது. ஆனால், இன்று ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே ஒரு ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அண்மையில், ஜாக் டோர்சே இந்தியா வந்திருந்தார். அப்போது அவரை சில பெண் ஊடகவியலாளர்கள் சந்தித்தனர். அவர்களுடன் தலித் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவரும் இருந்தார். அந்தப் பெண் ஜாக் டோர்சேவுக்கு ஒரு பதாகையைப் பரிசாக வழங்கினார். அந்தப் பதாகையில், பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம் (smash Brahminical patriarchy) என எழுதப்பட்டிருந்தது.

பின்னர் அந்தப் புகைப்படத்தை அந்தச் சமூகச் செயற்பாட்டாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர தற்போது அதுவும் சர்ச்சையாகியுள்ளது.

குவியும் கண்டனங்கள்:

ஜாக் டோர்சேவின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதித் துறை தலைவர் டி.வி.மோகன்தாஸ் பாய் கூறும்போது, ஜாக் டோர்சே பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மோகன்தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதேபோல் நாளை யூத மதத்துக்கு எதிராக வாசகம் கொண்ட பதாகையை வழங்கினாலும்கூட ஜாக்கும் அவரது ஆதரவாளர்களும் ஏந்தி நிற்பார்களா? ஏன் இந்தப் பாரபட்சம்? எந்த ஒரு சமூகத்துக்கும் எதிராக வெறுப்பை விதைப்பது தவறானது" எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் இந்தியா தரப்பில், "இந்த போஸ்டரை தலித் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் ஜாக்குக்கு அளித்தார். ட்விட்டர் பயன்பாட்டால் ஏற்படும் அனுபவம் குறித்து நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இதனை அந்த சமூக ஆர்வலர் ஜாக்குக்கு வழங்கினார்.

எங்களது சேவையால் உலகம் முழுவதும் எல்லா தரப்பில் உண்டாகும் பொது உரையாடல்களை நாங்கள் கவனிக்கிறோம், செவி கொடுக்கிறோம், புரிந்து கொள்கிறோம் என்பதை நாங்கள் வெளிப்படையாக உணர்த்துவதற்காக அந்த போஸ்டர் பெறப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்ப்புகள் மேன்மேலும் வலுக்கவே ட்விட்டர் சமூக வலைதளத்தின் சட்டம், கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் துறை தலைவர் விஜயா கட்டே வருத்தம் தெரிவித்தார். அவரும்  ஜாக் டோர்சேவுடன் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விஜயா கட்டே, "நான் இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களது கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் எங்களுக்குக் கிடைத்த ஒரு பரிசுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் முன்யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். ட்விட்டர் தளம் எப்போதும் எல்லோருக்கும் சமமானதாக இருக்கவே முற்படுகிறது. ஆனால், இங்கு இந்தியாவில் அதைச் செயல்படுத்தத் தவறிவிட்டோம். இந்திய வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT