இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான ஜாஃபர் ஷெரீப் மறைவு

செய்திப்பிரிவு

முன்னாள் ரயில்வே மந்திரி ஜாஃபர் ஷெரீப், உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது, 85. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் 1991 முதல் 96 வரை ரயில்வே அமைச்சராக  ஜாஃபர் ஷெரீப், பணியாற்றினார்.

கடந்த சில நாட்களாக அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கர்நாடகாவில் எங்கள் கட்சியின் மற்றொரு மூத்த அன்புக்குரிய, மரியாதைக்குரிய முன்னாள் ரயில்வே மந்திரி ஜாஃபர் ஷெரீப் காலமானார் என்ற செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.   ஜாஃபர் ஷெரீப் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு இன்று துயரமான நாள். அவரது குடும்பதினருக்கும், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மவுலானா அபுல் கலாம் ஆஸாத்தின்  ‘இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்’ என்ற நூலின் உருது மொழிபெயர்ப்பை வெளியிட ஆவலுடன் இருந்தார் ஜாஃபர் ஷெரீஃப். இம்மாதம் 28ம் தேதி பிரணாப் முகர்ஜியை வைத்து அதனை வெளியிடத் திட்டமிட்டிருந்தார், அதற்குள் காலதேவன் அவரை அழைத்துக் கொண்டான். பெங்களூரு வடக்கு தொகுதியை அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.  7 முறை எம்.பியாக இருந்துள்ளார்.

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகெரேயில் நவம்பர் 3, 1933-ல் பிறந்தார் ஜாஃபர்.

எமர்ஜென்சிக்குப் பிறகான 1977 தேர்தலில் லோக்சபா உறுப்பினரானார், இவர் 6,7,8,9,10, 12வது மற்றும் 13வது லோக்சபாக்களில் எம்.பியாக இருந்தவர். இவர் கடைசியாக 2009ல் தேர்தலில் நின்று பாஜக வேட்பாளர் சந்த்ரே கவுடாவிடம் தோல்வியடைந்தார்.

ரயில்வே அமைச்சராக இருந்த போது கர்நாடகாவில் மீட்டர் கேஜ் பாதைகளை பிராட் கேஜ் பாதைகளாக மாற்றி அமைத்ததில் இவரது பங்கு அதிகம். மேலும் பெங்களூரு எலஹங்காவில் ரயில்வேயின் வீல் அண்ட் ஆக்சில் பிளாண்ட் வர காரணமானவரும் ஜாஃபர் ஷெரீப்தான்.

SCROLL FOR NEXT