இந்தியா

தயாநிதி, கலாநிதி மீது விரைவில் குற்றப்பத்திரிகை: ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம்

செய்திப்பிரிவு

ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர் பாக தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது மூன்று ஆண்டு களுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் அந்நிறுவனத்தை கைப் பற்ற உதவியதாக குற்றம் சாட்டப் பட்டது. இதுகுறித்து சிபிஐ கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை தொடர போதிய ஆதாரங்கள் இருப்பதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி சமீபத்தில் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை கள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறும்போது, ‘அட்டர்னி ஜெனரல் அளித்துள்ள கருத்து, நீதிமன்ற ஆணை மூலம் மலேசிய அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், வேறு வழிகளில் பெறப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

இன்னும் ஒருவாரத்தில் தயாநிதி, கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படும் என்று தெரிகிறது. மேலும் மலேசிய தொழிலதிபர் டி.அனந்தகிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சன் டிரைக்ட் டிவி ஆகிய நிறுவனங்களின் மூத்த நிர்வாகி ரால்ப் மார்ஷல் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால், வழக்கின் விசாரணையும் துரிதமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT