அதிதீவிர புயலாக மாறிய டிட்லி புயல் தற்போது ஒடிஷாவின் கோபால்பூருக்கு 320 கிமீ தொலைவில் தென் கிழக்கே, ஆந்திர கலிங்கப்பட்டிணத்துக்கு தென் கிழக்கே 270 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
விசாகப்பட்டிணம் வானிலை மைய தகவல்களின் படி இது அடுத்த 2 மணி நேரங்களில் மேலும் தீவிர புயலாக உருவெடுத்து அக்டோபர் 11 காலை 5.30 மணியளவில் ஒடிசா கோபால்பூர் மற்றும் ஆந்திர கலிங்கப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்று 145 கிமீ வேகத்தில் அடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு இந்தப் புயல் வடகிழக்கு திசை நோக்கி திரும்பி மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து பிறகு படிப்படியாக பலமிழக்கும்.
இதன் வேகம் காரணமாக ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
வடக்கு ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிசாவில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகள், ஆந்திரா கலிங்கப்பட்டிணம் பகுதியில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் பெரிய அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
6 மேற்குவங்க மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை:
மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, காற்றும் பெரிய அளவில் வீசும். இந்த நிலை 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்டோபர் 12,13 தேதிகளில் கொல்கத்தா, ஹவுராவில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14 முதல் மேகங்கள் மறையத் தொடங்கும். இதனால் துர்கா பூஜைத் திருவிழாவின் போது பாதிப்பிருக்காது என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதற்கிடையே மக்கள் புயல் அச்சத்தினால் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்க நீண்ட கியூக்களில் நிற்பதையும் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையையும் பார்த்த ஒடிசா அமைச்சர் பதற்றமாக வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் வியாபாரிகள் பொருட்களைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.