இந்தியா

லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குநரே சிக்கினார்: சிபிஐ அதிரடி

மகேஷ் லங்கா

தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது புதிய எஃப்.ஐ.ஆர். சிபிஐயால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னுதாரணம் இல்லாத வகையில் நாட்டின் முதன்மை புலனாய்வுக் கழகமான சிபிஐ தங்களது சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதே லஞ்ச வழக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

அஸ்தானா 1984ம் ஆண்டு பேட்ச் குஜராத் ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய ஒரு விவகாரத்தில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. குரேஷி மீது நிதி மோசடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் அஸ்தானாவுக்கும் இடையே உட்பகை இருப்பதாகவும் சிபிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தரகர் மனோஜ்குமார் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவர் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அதாவது குரேஷி சார்பாக இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவே புகார் எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிட்டதாக அஸ்தானா புகார் பதிவு செய்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதனையடுத்து சிபிஐ அஸ்தானா குற்றச்சாட்டை மறுத்து அஸ்தானா மீதே சுமார் அரைடஜன் வழக்குகள் தொடர்பாக விசாரணையில் இருப்பதாக செய்திக்குறிப்பு வெளியிட்டது.

அஸ்தானா மீது லஞ்சப் புகார் எழுவது இது முதல் முறையல்ல. சந்தேசரா சகோதரர்கள் தொடர்பான வழக்கிலும் அஸ்தானா பெயர் அடிபட்டது. வதோதரா தொழிலதிபர்களான சந்தேசரா சகோதரர்கள் தற்போது அயல்நாட்டில் உள்ளனர். இவர்கள் மீது ரூ.5200 கோடி கடன் மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT