சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவின் வருமான வரிக் கணக்கு களை ஆதாரமாகக் கருத வேண்டும் என அவரது வழக்கறிஞர் மணிசங்கர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வி.என்.சுதாகரன், இளவரசி ஆகி யோர் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜராகவில்லை.
இதையடுத்து, சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரை வாதிடு மாறு நீதிபதி டி'குன்ஹா கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் மணிசங்கர் முன்வைத்த வாதம் வருமாறு:
“இந்த வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், வழக்குப் பதிவு செய்தது, விசாரணை நடத்தியது, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது என அனைத்திலும் சட்டத்துக்கு விரோதமாகவே செயல் பட்டுள்ளனர். இதேபோல சசிகலாவின் வருமான வரிக் கணக்குகள் தொடர் பாகவும் அவர்கள் முறையாக விசாரிக்கவில்லை.
வழக்கு காலத்துக்கு முந்தைய காலகட்டமான 1991-க்கு முன்பாகவே சசிகலாவுக்கு தனிப்பட்ட வருமானமும் அவர் பங்குதாரராக இருந்த தனியார் நிறுவனங்களின் வருமானமும் இருந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த வருமானத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கில் ஆதாரமாக சேர்க்கவில்லை.
வருமான வரிக் கணக்கை ஏற்க வேண்டும்
சசிகலாவின் சொந்த நிறுவனமான ‘வினோத் வீடியோ விஷன்' நிறுவனத்தின் மூலம் அவருக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் லாபம் வந்திருக்கிறது.1993-94-ம் ஆண்டில் மட்டும் ரூ.10 லட்சம் லாபம் கிடைத் திருக்கிறது. இது தொடர்பாக அவர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
அதே போல சசிகலா பங்குதாரராக இருந்த ‘ஜெ பப்ளிகேஷன்ஸ்' மற்றும் ‘சசி எண்டர்பிரைசஸ்' ஆகிய தனியார் நிறுவனங்களில் இருந்து அவருக்கு 1992-93 ஆண்டில் மட்டும் ரூ.24 லட்சத்து 4 ஆயிரத்து 700 வருமானம் வந்திருக்கிறது. இதே போல வழக்கு காலத்தில் அவரின் தனிப்பட்ட வருமானத்தையும் சேர்த்து சுமார் ரூ.40 லட்சம் வந்திருக்கிறது என்பதை அவருடைய வருமான வரிக்கணக்கில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கின் தொடர்புடைய சொத்தாகவோ அல்லது ஆதாரமாகவோகூட ஏற்க வில்லை. உச்ச நீதிமன்றம் 2000-ம் ஆண்டு மோகன்லால் சோனி என்பவரின் வழக்கில் வெளியிட்ட தீர்ப்பில்,‘வழக்கு காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்கு பணத்தை வழக்கில் ஆதாரமாக கருத வேண்டும்'என உத்தரவிட்டிருக்கிறது.
எனவே சசிகலாவின் தனிப்பட்ட வருமானத்தையும் அவர் பங்குதாரராக இருந்த நிறுவனங்களின் மூலம் கிடைத்த வருமானத்தையும் குறிப்பாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த பணத்தையும் வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருத வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா வழக்கை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்து சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரை தொடர்ந்து வாதிடுமாறு உத்தரவிட்டார்.