சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், துணை இயக்குநர் ராகேஸ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதல் குறித்த முழு விவரங்களைக் கேட்டுள்ள பிரதமர் மோடி, இரு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
ரூ.3 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதே சிபிஐ வழக்குப்பதிவு செய்து நேற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி களத்தில் இறங்கி பிரச்சினை தீர்க்க முயன்றுள்ளார்.
தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதுவரை இல்லாத வகையில் சிபிஐ தங்களது சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதே லஞ்ச வழக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
அஸ்தானா 1984ம் ஆண்டு பேட்ச் குஜராத் ஐபிஎஸ் அதிகாரியாவார். தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய ஒரு விவகாரத்தில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது, அந்த வழக்கில் அஸ்தானா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் அஸ்தானாவுக்கும் இடையே உட்பகை இருப்பது இப்போதுவெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையே சிபிஐ துணை இயக்குநர் அஸ்தானா உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் தொடர்பாக, போலீஸ் டிஎஸ்பி, தேவேந்திர குமாரை இன்று சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சானா என்பவர் சமீபத்தில் சிபிஐ அமைப்பில் அளித்த புகாரில் அடிப்படையில் சிபிஐ இயக்குநர் அஸ்தானா, போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மொயின் குரேஷி தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் போலீஸ் டிஎஸ்பி தேவந்திர குமார். இவர் சதீஸ்சானாவை வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக சிபிஐ அதிகாரி அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக போலியாக வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிபிஐ அதிகாரிகள் அஸ்தானா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சிபிஐ இயக்குநருக்கும், சிபிஐ துணை இயக்குநருக்கும் இடையிலான உட்சண்டை தீவிரமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், பிரதமர் அலுவலகம் தலையிட்டு இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள விரும்புகிறார். ஆதலால், முழுமையான அறிக்கையை சிபிஐயிடம் கேட்டுள்ளது.
மேலும், சிபிஐ இயக்குநர் அலோக் குமார், துணை இயக்குநர் அஸ்தானா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.