ஜாமீன் தொகையை செலுத்த, நியூயார்க் மற்றும் லண்டன் ஓட்டல்களை விற்கும் முயற்சியில் சஹாரா குழும அதிபர் சுப்ரதா ராய் தீவிரமாக இறங்கியுள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித் தராத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஹாரா குழும அதிபர் சுப்ரதா ராய் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் வெளியில் விட, ரூ.10,000 கோடி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்ததையடுத்து, சிறையில் இருந்தபடியே பணம் திரட்டும் முயற்சியில் இறங்கி யுள்ளார்.
அவரது நியூயார்க் மற்றும் லண்டன் ஓட்டல்களை விற்க வசதியாக திகார் சிறை நிர்வாகம் சிறை வளாகத்திலேயே 600 சதுர அடி அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி தந்துள்ளது. இதில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேரம் பேச வசதி உள்ளது. அவருடன் சிறையில் உள்ள இயக்குநர்கள் இருவரும் தங்க வசதியாக மூன்று படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டல்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் திகார் சிறையில் சுப்ரதா ராயை சந்தித்துப் பேசி வருகின்றனர்.
நியூயார்க்கின் மேன்ஹாட் டனில் உள்ள அவரது நியூயார்க் பிளாசா ஓட்டல் 107 ஆண்டுகள் பழமையானது. லண்டனில் உள்ள கிராஸ்வெனார் ஓட்டல் சவுதி அரேபிய நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகில் உள்ள இந்த ஓட்டல் 1929-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த ஓட்டலில் 282 அறைகள் உள்ளன. ராயல் சூட் எனப்படும் வசதிமிக்க அறையில் ஒரு இரவு தங்க ரூ.18.34 லட்சம் செலுத்த வேண்டும். மொத்தம் 4,490 சதுர அடி கொண்ட இந்த அறைக்கு 24 மணி நேர பணியாட்கள், மூன்று படுக்கையறைகள், 12 பேர் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் சாப்பாடு பரிமாறும் மேஜை, சமைய லறை, உடற்பயிற்சி வசதி, பியானோ இசைக்கருவி, ஐ-பாட், நுாலகம் அனைத்தும் உண்டு. இந்த ஓட்டலில் 2,000 விருந்தினர்கள் அமரும் வசதி கொண்ட மிகப்பெரிய அரங்கம் உள்ளது. இது, ஐரோப்பியா விலேயே பெரிய அரங்கம் என்று கூறப்படுகிறது.
இதன் உரிமையாளரான சுப்ரதா ராய்க்கு திகார் சிறையில் மற்றவர்களும் பயன்படுத்தும் பொது கழிப்பறையுடன் கூடிய அறை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதி மன்றம் நிர்ணயித்துள்ள ரூ.10,000 கோடியும், இதுவரை எந்த நீதிமன்றமும் நிர்ணயிக்காத தொகை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண நீதிமன்றம் பணக்கார கைதி ஒருவருக்கு ரூ.18,345 கோடி ஜாமீன் தொகை விதித்தது. பின்னர் மேல் முறையீட்டில் இத்தொகை ரூ.2.75 கோடியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் உள்ள இரண்டு ஓட்டல்களையும் விற்று ஜாமீன் தொகையை செலுத்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் இருந்து 10 வேலை நாட்களை உச்ச நீதிமன்றம் அவகாசமாக அளித்துள்ளது.