உ.பி.யில் 2014 மக்களவை தேர்தல், அதன் பிறகு நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய இரு தேர்தல்களிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது. இதனால், மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்கு எதிராக ஒன்றுசேர முடிவு செய்தனர். உ.பி.யில் அகிலேஷ், மாயாவதி மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் அஜித்சிங் ஆகியோர் இணைந்துவிட காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர், ம.பி. மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதனால், அவர் உ.பி.யிலும் மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸுடன் சேராமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை குறித்து சமாஜ்வாதி கட்சியினர் நேற்று கூடி ஆலோசனை செய்தனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சமாஜ்வாதி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘சத்தீஸ்கரில் அஜீத் ஜோகியுடனும், ம.பி., ராஜஸ்தானில் தனித்தும் மாயாவதி போட்டியிடுவது பாஜகவிற்கு சாதகமானது. இதே நிலை உ.பி.யில் மக்களவைத் தேர்தலின்போது இருந்தால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து பாஜக பலன் பெற்று விடும். எனவே, தனித்து போட்டியிடலாம் அல்லது காங்கிரஸுடன் மட்டும் சேரலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் யோசனை கூறினர்’’ எனத் தெரிவித்தனர்.
உ.பி.யில் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகள் கடந்த 2014 மக்களவை தேர்தலில் சமாஜ்வாதிக்கு கிடைத்தது. இதனால், அக்கட்சியால் 5 எம்.பி.க்கள் பெற முடிந்தது. சமாஜ்வாதியை விட அதிக சதவிகித வாக்குகள் பெற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. எனவே, உ.பி.யில் காங்கிரஸூடன் சேராமல் மாயாவதி தனித்துப் போட்டியிட முடிவு செய்தால் மாயாவதியுடன் சமாஜ்வாதி கூட்டணி சேருவது கடினம் எனக் கருதப்படுகிறது. இது தொடர்பாக மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 11-ல் வெளியானபின், சமாஜ்வாதி மீண்டும் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளது.