காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பாலியல் புகாரின்பேரில் இந்திய மல்யுத்த நடுவர் விரேந்தர் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரில், மல்யுத்த நடுவர் விரேந்தர் மாலிக், காமன்வெல்த் போட்டிக்கான 215 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ இந்தியக் குழுவில் ஒருவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவர் கைது செய்யப்பட்டதையும் ஸ்காட் லாந்து யார்டு செய்தித் தொடர் பாளர் உறுதி செய்துள்ளார். ஆனால், மேலதிக தகவல் களைத் தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் கூறும்போது, “ஆகஸ்ட் 2-ம் தேதி, 45 மற்றும் 49 வயதான இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார். பாலியல் புகாரின் அடிப்படையில் விரேந்தர் கைது செய்யப்பட்டாரா என்பதையும் உறுதி செய்ய அவர் மறுத்துவிட்டார்.
கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள் இருவரும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர். இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் தங்கியுள்ள காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இவ்விருவரும் தங்கவில்லை. மாறாக, தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் மைக் கூப்பர், “கைது சம்பவம் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், இது காவல்துறை தொடர்பானது. விவரங்களைத் தெரிவிக்க இயலாது” என்றனர்.
அமைச்சர் எச்சரிக்கை
இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இதுகுறித்துக் கூறும்போது, “இன்னும் முழு விவரம் தெரியவில்லை. அங்குள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் நிச்சயம் அது கண்டிக்கத்தக்கது. விளையாட்டு வீரர்கள் கடின உழைப்பை இந்தியாவுக்கு அர்ப்பணிக்கின்றனர்.
இதுபோன்ற செயல்கள், ஒவ்வொரு இந்தியருக்கும் வேதனையை ஏற்படுத்துகிறது. குற்றம் நடந்தது உண்மை யெனத் -தெரியவந்தால், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.