சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டுள்ளார்.
கடந்த 1979-ம் ஆண்டில் அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம்- யூனியன் பிரதேசங்கள் காவல் பணியில் அலோக் வர்மா இணைந்தார். டெல்லி சிறைத்துறை தலைவர், மிசோரம் காவல் துறை தலைவர், புதுச்சேரி காவல் துறை தலைவர், அந்தமான்-நிகோபர் காவல் துறை தலைவர், டெல்லி ஆணையர் பதவிகளை வகித்த அவர் கடந்த 2017-ல் சிபிஐ இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
கடந்த 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். கடந்த 2016 டிசம்பரில் சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017 ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றபோது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட் டார். வரும் ஜனவரியில் அலோக் வர்மா ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு அடுத்து ராகேஷ் அஸ்தானா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மோதல் பின்னணி
குஜராத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ரூ.5,000 கோடி வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீதும் புகார் எழுந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி அவரை சிபிஐ இணை இயக்குந ராக நியமிக்க அலோக் வர்மா ஆரம் பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்ததா கக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. இந்த மோதல், மொயின் குரேஷி வழக்கால் இப்போது வெளிச்சத்துக்கு வந் துள்ளது.
நிதி மோசடி தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு களை நீர்த்துப் போக செய்ய ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3 கோடியை மொயின் குரேஷி வழங்கி யதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்ச பணத்தை கைமாற்றியதா கக் கூறப்படும் மனோஜ் பிரசாத் என்ற இடைத்தரகரை சிபிஐ அண்மையில் கைது செய்தது. அவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாகக் கூறி யுள்ளார்.
இதைத் தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது கடந்த 15-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் தேவேந்திர குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தர விட்டார். அதன்படி கடந்த 21-ம் தேதி அலோக் வர்மா பிரதமரை சந்தித்துப் பேசினார்.
அப்போது சிபிஐ பணிக்கு ராகேஷ் அஸ்தானா தகுதியில்லா தவர். பல கோடி ஊழல் வழக்கில் அவர் மீதான விசாரணை நிலுவை யில் இருப்பதால் அவரை மீண்டும் குஜராத் காவல் பணிக்கு அனுப்பு மாறு பிரதமரிடம் அலோக் வர்மா வலியுறுத்தியதாகக் கூறப்படு கிறது. இதற்குப் பதிலடியாக அலோக் வர்மா லஞ்சம் வாங்கி யதாக கேபினட் செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
ராகேஷை கைது செய்ய தடை
லஞ்ச வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி ராகேஷ் அஸ்தானா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி நஜ்மி வாஜிரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியபோது, "இந்த வழக்கு குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் அடுத்த விசாரணை அக்டோபர் 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதுவரை இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும். எனினும் வழக்கு விசாரணைக்கு தடையில்லை. இதுகுறித்து சிபிஐ இயக்குநர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி வரும் 29-ம் தேதி வரை ராகேஷ் அஸ்தானா கைது செய்யப்பட மாட்டார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதேபோல தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கையும் விசாரித்த நீதிபதி நஜ்மி வாஜிரி, சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் டிஎஸ்பி தேவேந்திர குமார் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் சிநேகி மான், அவரை 7 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.