ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்த மாதத்தில் நடைபெறும் நான்காவது தாக்குதல் சம்பவமாகும்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது: "அர்னியா சப் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் 7 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்றிரவு 11.30 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. இன்று காலை 6 மணி வரைக்கும் தாக்குதல் நீடித்தது. இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்" என்றார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை), பூஞ்ச் மாவட்டத்தில் மேதர் என்கிற இடத்தில் இந்தியப் படைகள் அமைத்துள்ள முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை உயரதிகாரிகளும் கடந்த 8-ம் தேதி சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாட்டு எல்லையில் அமைதி நிலவச் செய்ய தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி இருதரப்பிலும் விவாதித்தனர். அதன் பிறகு பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் மூன்று முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் லேஹ், கார்கில் ஆகிய இடங்களுக்கு நாளை செல்கிறார். இந்நிலையில், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 5-ல் பூஞ்ச் மாவட்டம் ஷேர் சக்தி பகுதியிலும், ஆகஸ்ட் 8-ல் பீம்பெர் பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.