கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குடன் திமுக தலைவர் கருணாநிதி மனுவை சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில், ‘கச்சத்தீவை இலங்கைக்கு ஒப் படைத்து மத்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தம் சட்ட விரோதமானது. மாநில அரசின் ஒப்புதல் இல்லா மல் போடப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் சட்ட விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக மீனவர்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனு நீதிபதிகள் எச்.எல். தத்து, எஸ்.ஏ.பாப்தே ஆகியோரடங் கிய அமர்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. கச்சத்தீவை மீட்க கோரி முதல்வர் ஜெயலலிதா சார்பிலும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு வழக்குகளையும் ஒன்றாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.