தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், நிஜாமாபாத் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கவிதா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவிதா சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, காஷ்மீர், தெலங்கானா பகுதிகள் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன” என்று கூறி இருந்தார்.
இதுதொடர்பாக பாஜக சட்டப் பிரிவு அமைப்பாளர் கே.கருணா சாகர் ஹைதராபாத் நாம்பல்லி யில் உள்ள 7 வது கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘கவிதாவின் பேச்சு பிரிவினை யைத் தூண்டும் வகையில் உள்ளது. அவர் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இவ்வழக்கை கடந்த புதன் கிழமை விசாரித்த நீதிமன்றம், கவிதா மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் பழையநகரம் மாதண்ண பேட்டை காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய குற்றவி யல் நடைமுறைச் சட்டம் 124- ஏ (தேசத்துரோகம்), 505 (பொதுநலத் துக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் பேசுவது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவிதாவிடம் விசாரணை செய்து, வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.