கமலா பெனிவால் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட தாலேயே மிசோரம் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி நீக்கத்திற்கு அரசியல் காரணம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்க மளித்துள்ளது.
மிசோரம் ஆளுநராக இருந்த கமலா பெனிவால், அப்பதவியிலிருந்து கடந்த புதன்கிழமை நீக்கப்பட்டார். முன்பு அவர் குஜராத் ஆளுநராக இருந்தபோது, மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியுடன் லோகாயுக்தா நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. இதை மனதில் வைத்துத் தான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கமலாபெனிவால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதை மறுத்துள்ள மத்திய அரசு, அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளோம் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடியரசுத் தலைவரின் உரிய அனுமதியைப் பெற்றும், அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு உட்பட்டும் மிசோரம் ஆளுநராக இருந்த கமலா பெனிவால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் சம்பந்தமாக மேற்கொண்டு ஏதாவது கருத்து தெரிவிப்பதாக இருந்தால், அதை நாடாளுமன்றத்தில் தெரிவிப்போம்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “கமலா பெனிவால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் காரணம் ஏதும் இல்லை. சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டும், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும்தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநர்கள் நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவும் மீறப்படவில்லை.
அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை நீக்குவது தொடர்பாக தீவிரமாக பரிசீலித்த பிறகுதான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கமலா பெனிவால் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது” என்றார். இரண்டாவது ஆளுநர்மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவி விலகுமாறு நிர்பந்தித்தது. அதையடுத்து சில ஆளுநர்கள் பதவி விலகினர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவதாகத் தற்போது மிசோரம் ஆளுநராக இருந்த கமலா பெனிவால் நீக்கப்பட்டுள்ளார்.
மோடியுடன் கருத்து வேறுபாடு
முன்னதாக குஜராத் ஆளுராக கமலா பெனிவால் இருந்தபோது, லோகாயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ஏ.மேத்தாவை நியமித்தார். இதை எதிர்த்து அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, உயர் நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தது. இதற்கிடையே, லோகாயுக்தா தலைவராக பதவியேற்க ஆர்.ஏ.மேத்தா மறுத்துவிட்டார். பின்னர், புதிதாக ஒருவரை அப்பதவிக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், கமலா பெனிவாலை பதவியிலிருந்து விலகுமாறு மறைமுகமாக நிர்பந்திக்கும் வகையில், அவரை சமீபத்தில்தான் மிசோரம் ஆளுநராக மாற்றியது. ஆனால், அவர் பதவி விலகாமல் மிசோரம் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.- பிடிஐ