இந்தியா

பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பாலியல் புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர் தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக புகார எழுந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சமீபத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  புகார் அளித்தும் 70 நாட்கள் ஆகியும் பிஷப் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி கன்னியாஸ்திரிகள் 5 பேர் 14 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கோட்டயம் போலீஸ் எஸ்.பி.ஹரி சங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிஷப் பிராங்கோ தனது பதவியில் இருந்து விலகி விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கோரி பிஷப் பிராங்கோ சார்பில் தாக்கல் செய்த மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரது சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனிடையே பிராங்கோ தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிராங்கோவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், விசாரணை நேரத்தை தவிர மற்ற சமயங்களில் கேரள மாநிலத்துக்குள் வரக்கூடாது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை கேரள உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.

SCROLL FOR NEXT