நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ‘கொலீஜியம்’ முறையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘கொலீஜியம்’ முறைக்கு மாற்றாக ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்.ஜே.ஏ.சி.)’ அமைக்க வழிகோலும் மசோதா நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதனுடன் அரசியல் சாசன திருத்த மசோதாவும் நிறைவேற்றப்படடது. இந்த மசோதாக்களுக்கு மாநில சட்டமன்றங்கள் ஒப்புதல் அளிக்கவேண்டியுள்ளது.
இந்நிலையில் நீதிபதிகள் நியமன ஆணையம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரி 4 பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னாள் கூடுதல் செலிசிட்டர் ஜெனரல் விஷ்வஜித் பட்டாச்சார்யா, வழக்கறிஞர்கள் ஆர்.கே.கபூர், மனோகர் லால் சர்மா உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி ஏ.ஆர் தவே தலைமையில் நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதார்கள் தரப்பில், “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 121-வது அரசியல் சாசன திருத்தம், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா ஆகிய இரண்டும் அரசியல் சாசன அடிப்படை அமைப்பை பாதிக்கின்றன. எனவே அவை அரசியல் சாசனதுக்கு எதிரானவை.
அரசு நிர்வாகத்தில் இருந்து நீதிமன்றங்கள் முற்றிலும் விலகியிருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின் 50-வது பிரிவு அங்கீகரிக்கிறது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பான தலைமை நீதிபதியின் அதிகாரத்தை பறிப்பது, நீதிமன்ற அமைப்பின் சுதந்திரத்தை பாதிக்கும். அரசியல் சாசன அதிகாரப் பகிர்வு கோட்பாட்டையும் பாதிக்கும். இவை இரண்டுமே இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகள்” என்று வாதிட்டனர்.
இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்ஹி எதிர்ப்பு தெரிவித்தார்.
“ஒரு மசோதா பல்வேறு நடைமுறைகளை கடந்த பிறகே சட்டமாகிறது. சட்ட நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றார்.
தெலங்கானா மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து நீதிபதிகள். “இந்த மசோதாவின் தற்போதைய நிலையில் நாங்கள் தலையிட முடியாது. இந்த மனு உரிய காலத்துக்கு முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டதாக கருதுகிறோம். என்றாலும் மசோதாவின் பிந்தைய நிலையில் (சட்ட அங்கீகாரம் பெற்ற பிறகு) மனுதாரர்கள் நீதிமன்றத்தை அனுகலாம்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.