ராமர் கோவில் பிரச்சினை தொடர்பாக தான் கூறியது தனிப்பட்ட கருத்தே தவிர, கட்சியின் கருத்தல்ல என்று தெரிவித்துள்ள சசிதரூர் தான் கூறிய வார்த்தைகளை சிதைத்து வெளியிடுவதாக ஊடகங்களுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
நான் கூறியதை தவறான நோக்கத்தோடு திரித்துக் கூறும் சில ஊடகங்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ''ராமர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் வேண்டும் என்று பெரும்பான்மையான இந்துக்கள் விரும்புவார்கள். ஆனால் மற்றவர்கள் வழிபாட்டு இடத்தை அழித்துவிட்டு அங்கு கோவில் கட்டுவதை எந்த நல்ல இந்துவும் விரும்ப மாட்டார்'' என்றுதான் நான் கூறியிருந்தேன்.
ஒரு இலக்கிய விழாவில் என் தனிப்பட்ட கருத்தாகவே இதைத் தெரிவித்தேன். நான் என் கட்சிக்கான செய்தித் தொடர்பாளர் இல்லை. நான் கூறியதாக ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ள கருத்துக்கு நான் உரிமை கோரப் போவது இல்லை.
இவ்வாறு சசி தரூர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சசி தரூர் முந்தைய கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்கையில், ‘‘உண்மையான இந்துக்கள் அயோத்தியாவில் இந்துக் கோவில் கட்டப்படுவதை விரும்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது தரூரின் அல்லது ராகுல் காந்தியின் பார்வையாக இருக்கலாம், ஆனால் சாதாரண மக்களுக்கு அல்ல. அவர்கள் யதார்த்தத்தில் இருந்து எவ்வாறு விலகியிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.'' என்று தெரிவித்திருந்தார்.