இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நிறுத்தம்: மாவட்ட நிர்வாகம் முடிவு

செய்திப்பிரிவு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 7 நாட்கள் ஆகியும் மீட்க முடியாததால், பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளை சனிக்கிழமை நிறுத்தியது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள‌ சுலிகேரி கிராமத்தைச் சேர்ந்த ஹ‌னுமந்தப்பா ஹ‌ட்டியின் மகன் திம்மண்ணா (6). கடந்த ஞாயிற்றுக்கிழமை 350 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். முதலில் 160 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன், தொடர்ந்து மண்சரிந்ததன் காரணமாக 200 அடிக்கு கீழே சென்று விட்டான். இதனால், கடந்த 7 நாட்களாக ஆழ்துளை கிணற்றின் அருகே 170 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டியும் அவனை மீட்க முடியவில்லை.

பெல்லாரியைச் சேர்ந்த மஞ்சேய் கவுடா, புனேவைச் சேர்ந்த ஷாமிலி தன்னார்வத் தொண்டு நிறுவன பொறியாளர் பசவராஜ், ம‌துரையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் தங்கள‌து குழுவினருடன் ரோபோ மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டன‌ர். சிறுவனின் தலைக்கு மேல் கல்லும் மணலும் குவிந்து கிடப்பதால் ரோபோவால் மீட்க முடியாமல் போனது.

இந்நிலையில், சிறுவனின் தந்தை ஹனுமந்தப்பா, கர்நாடக அரசுக்கு சனிக்கிழமை விடுத்த கோரிக்கையில், “எனது மகன் இறந்துவிட்டான். அவனை அப் படியே போட்டு மூடி விடுங்கள். நிலத்தை மேலும் தோண்டி பாழாக்க‌ வேண்டாம். இந்நிலத்தை நம்பித்தான் எனது இரு மகள்களின் எதிர்காலம் இருக்கிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து சுலிகேரி கிராமத்தில் பாகல்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் மேகண் ணவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறுவனின் குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்றும், மண்ணியல் துறையை சேர்ந்த அதிகாரிகள், மீட்பு படையினரின் பரிந்துரை உள்ளிட்ட வற்றை கருத்தில் கொண்டும் மீட்புப் பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆழ்துளை கிணற்றை சுற்றி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT