இந்தியா

குஜராத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்: கலவரத்தில் ஈடுபட்ட 342 பேர் கைது

மகேஷ் லங்கா

குஜராத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தின் வடக்கு மாவட்டங்களில் வசித்துவரும் புலம்பெயர்ந்தோரை இலக்கு வைத்து இவ்வன்முறைத் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.

இவர்களில் 5000க்கும் அதிகமானவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகிறார்கள். தற்காலிகத் தொழிலாளர்களாகவும், தினசரி ஊதியம் பெறுபவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற இவர்களில் பலரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு பயந்து தற்போதைய புலம்பெயர்ந்த வாழ்விடங்களிலிருந்து மீண்டும் வேறு இடத்திதிற்குத் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சபர்கந்தா மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர்,  14 மாதங்களே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவமே, கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களிலும் தொழிற்சாலைகளிலும் இந்த வன்முறைத் தாக்குதல்களை தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குற்றவாளி கைது

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சிறுமிக்கு நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்திற்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார், இதுவே குஜராத்தில் குடியேறியுள்ள குஜராத்தி மொழி பேசாத மற்ற மக்களுக்கு எதிராக எதிர்ப்புகளையும் வன்முறைகளையும் தூண்டியது.

கடந்த சில நாட்களில், வடக்கு குஜராத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வன்முறை பெருகியது, இதில் குடியேறிய தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீது இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கலவரத்தின்போது, வன்முறையாளர்களிடமிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தப்பியோட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது போலீஸார் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர்களைத் தாக்கும் நிலையும் ஏற்பட்டது. மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மீதமுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத் காவல்துறைத் தலைவர் சிவானந்த் ஜா பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு சிவானந்த் பேசுகையில், ''வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட 342 பேரைக் கைது செய்துள்ளோம். இதில் இதுவரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரச்சினை அதிகமுள்ள பகுதிகளில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க கூடுதலான காவல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன'' என்றார்.

SCROLL FOR NEXT