பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.637 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மோடி மற்றும் அவரின் குடும்பத்தினரின் அசையாச் சொத்துகள், நகைகள், ஃப்ளாட்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்து இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஹாங்காங்கில் இருந்து நீரவ் மோடிக்குச் சொந்தமான சுமார் ரூ.85 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த நகைகளை அமலாக்கத் துறை இணைத்துள்ளது.
அத்துடன் தெற்கு மும்பையில் இருந்து ரூ.19.5 கோடி மதிப்புள்ள ஃப்ளாட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 2017-ல் வாங்கப்பட்ட இந்த ஃப்ளாட் நீரவ் மோடியின் சகோதரி பூர்விக்குச் சொந்தமானதாகும். இதற்கான தொகை சிங்கப்பூரில் பராமரிக்கப்படும் பூர்வியின் பார்க்ளேஸ் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் பூர்வி மோடி மற்றும் அவரின் கணவர் மையாங்க் மேத்தா இருவருடைய முதலீட்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.44 கோடியை அமலாக்கத் துறை பட்டியலிட்டுள்ளது.
இதேபோல் மற்ற ஐந்து வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.278 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை கணக்கில் காண்பித்துள்ளது.
அத்துடன் லண்டனில் ரூ.56.97 கோடி மதிப்புள்ள சொத்துகளும், நியூயார்க்கில் உள்ள ரூ.216 கோடி மதிப்புள்ள சொத்துகளும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோதப் பரிவர்த்தனையும் செய்த வழக்கில் நீரவ் மோடி (47) வெளிநாட்டுக்குத் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.