அழுது அடம் பிடித்த 3வயது சிறுமியை, அங்கன் வாடி ஊழியர் ஒருவர் பீரோவில் வைத்து பூட்டிய அதிர்ச்சி சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்டம், ராமாயம்பேட்டா மண்டலம், வெங்கடாபூர் கிராமத்தை சேர்ந்தவர் அணில் (30), இவரது மனைவி சத்யம்மாள் (25). இவர்களது மகள் துர்காபவானி (3).
துர்காபவானியை அதே கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில் அவரது பெற்றோர் செவ்வாய்க்கிழமை சேர்ப்பித்துவிட்டு வந்தனர். ஆனால், துர்கா பவானி படிக்காமல் அழுது அடம் பிடித்துள்ளார்.
இதைப்பார்த்த அங்கன் வாடி ஊழியர் யசோதா ஆத்திரமடைந்தார். உடனே வகுப்பின் பக்கத்தில் இருந்த ஒரு இருட்டு அறையில் இருக்கும் பீரோவில் சிறுமி துர்கா பவானியை வைத்து பூட்டினார். இதனால் சிறிது நேரத்தில் சிறுமி துர்கா பவானி மூச்சு திணறி அழுதாள்.
உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கொண்டு போய் சேர்ந்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த தகவலை அறிந்த துர்கா பவானியின் பெற்றோர், உறவினர்கள், கிராமத்தினர் அங்கன்வாடி மையம் முன் கூடி, ஊழியர் யசோதா மற்றும் ஆசிரியை சியாமளா ஆகியோரை உடனைடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாய்-சேய் நலத்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.