இந்தியா

பிரியங்கா அரசியல் பிரவேசத்தை அவர்கள் குடும்பம்தான் தீர்மானிக்கும்: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் கருத்து

செய்திப்பிரிவு

பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் வற்புறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து அவரது குடும்பம் தான் தீர்மானிக்க முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், முன்பு காங்கிரஸில் இருந்தவருமான நட்வர் சிங் கூறினார்.

‘ஒன் லைப் இஸ் நாட் எனாப்’ என்ற தலைப்பில் நட்வர்சிங் சுயசரிதை எழுதியுள்ளார். இந்த நூல் குறித்து இவர் அண்மையில் பேட்டி அளித்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு சோனியா பதில் அளிக்கும்போது, “நானும் சுயசரிதை எழுதுவேன். அதில் பல உண்மைகள் வெளியாகும்” என்றார்.

இந்நிலையில் நட்வர்சிங் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு இடையில் பிடிஐ நிருபரிடம் நட்வர்சிங் கூறும்போது, “பிரியங்கா தீவிர அரசியலுக்கு வருவது குறித்து சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய 3 பேர் மட்டுமே முடிவெடிக்க முடியும். கட்சியில் பிரியங்காவுக்கு மிகப்பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டால் ராகுலின் நிலை என்னவாகும் என்று கேட்கிறீர்கள். இதையும் அவர்கள் குடும்பம்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “நானும் சுயசரிதை எழுதுவேன் என சோனியா கூறியதை அறிந்து வியப்படைந்தேன். தனிப்பட்ட நபரை மையப்படுத்தி நான் இந்த நூலை எழுதவில்லை. ஆனால் ஊடகங்கள் அவ்வாறு மாற்றிவிட்டன. வழக்கமாக அவர் (சோனியா) எதற்கும் பதில் அளிக்க மாட்டார். ஆனால் இதற்கு பதில் அளித்தது வியப்பாக உள்ளது. இதன் மூலம் புத்தக விற்பனை பெருமளவு உயர உதவி செய்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த நபர்களில் சோனியாவும் ஒருவர். அவர் கூறியவாறு சுயசரிதை எழுத வேண்டும். நாட்டுக்கு அவர் கடமைப்பட்டுள்ளார். நான் சுயசரிதை எழுதினால் பல உண்மைகள் வெளிவரும் என்று சோனியா கூறியுள்ளார். அது என்ன உண்மை என்பதை அறிய நானும் ஆவலுடன் காத்துள்ளேன்.

நான் சோனியாவுக்கு நெருக் கமாக இருந்தபோது, அவரை நூல் எழுதுமாறு பரிந்துரை செய்துள் ளேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். பிரியங்கா தனது சுயசரிதையை எழுதப்போவ தாகவும், அதிலேயே இணை நூலா சிரியராக தானும் எழுதப்போவதா கவும் சோனியா கூறினார்.

எனது சுயசரிதையில் சிலவற்றை நான் கூறவில்லை. 10 சதவீத நிகழ்வுகளை நான் ஒருபோதும் பேசமாட்டேன். எல்லாவற்றையும் பேசுவது கண்ணியம் அல்ல” என்றார்.

தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன்:

தீவிர அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் கட்சித் தலைமையேற்கப் போவதாகவும் கட்சியை வழிநடத்தப் போவதாகவும் வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை. நான் ஒருபோதும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை. இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT