ஆண்டிராய்ட் போனை தந்தை வாங்கி தராததால், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சனிக்கிழமை ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், தர்மவரம் மண்டலம் துர்காநகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மூத்த மகன் வம்சி கிருஷ்ணா (21)தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே இவரது தந்தை ஒரு ஆண்டிராய்ட் செல்போன் வாங்கி கொடுத்தார். இதனை வம்சி தொலைத்துவிட்டார். இதனால் மீண்டும் தனக்கு அதே போன்ற செல்போன் வேண்டும் என கேட்டார். இதற்கு ஒரு வாரத்தில் வாங்கி தருவதாக தந்தை கூறி உள்ளார். ஆனால் போன் இல்லாமல் கல்லூரிக்கு போனால் தனது நண்பர்கள் கேலி செய்வார்கள் என கூறி கடந்த இரண்டு நாட்களாக வம்சி கிருஷ்ணா கல்லூரிக்கு போகாமல் இருந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற வம்சி கிருஷ்ணா வீடு திரும்பவில்லை. சனிக்கிழமை காலை ரேகேடி பல்லி எனும் இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் வம்சியின் உடலை போலீஸார் மீட்டனர். அடையாள அட்டையின் மூலமாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.