இந்தியாவின் 68-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி குண்டு துளைக்காத மேடையை தவிர்த்துவிட்டு சாதாரண மேடையில் நின்று சுதந்திர தின உரையாற்றியதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்து:
ஸ்டண்ட்:
நெல்லை - எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான நாறும்பூநாதன்:
மோடி சாதாரண மேடையில் நின்று சுதந்திர தினவிழா உரையாற்றியது ஒருவகையான ஸ்டண்ட்.
மக்களவை தேர்தலின்போது நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் 100 இடங்களில் டிஜிட்டல் திரைமூலம் மோடி பிரசாரம் செய்வதற்காக பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டிருக்கின்றன. அவ்வாறு செலவிட்டவர் செலவை மிச்சப்படுத்துவதற்காக சாதாரண மேடையில் பேசியதாக கூறுவதை ஏற்பதற்கில்லை.
நான் பயப்படவில்லை என்று தனது துணிச்சலை பிரதமர் வெளிக்காட்டியிருக்கிறார். இது மக்களை ஈர்க்க செய்யப்படும் அதிரடி நாடகங்கள்.
துணிச்சலானது:
திருச்சி - நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம். சேகரன்:
சுதந்திர தின விழாவில் சாதாரண மேடையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருப்பது துணிச்சலான முன்னுதாரணம்.
உயிருக்கு அச்சுறுத்தல்தான் என்றாலும் கூட, இந்த விஷயத்தில் “ரிஸ்க்” எடுத்துள்ளார் மோடி. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும், அவர்களுக்கு தேவையானவர்களுக்கு இசட், இசட் பிளஸ் பாதுகாப்புக்கென நாள்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்கின்றனர். இது தேவையற்றது.
எங்கிருந்து அச்சுறுத்தல் வருகிறதோ, அதை வேரோடு கிள்ளி எறிய வேண்டும்.
அரசியல் நாடகம்:
கோவை - முருகசேனை அமைப்பின் நிறுவனர் சிவசாமி தமிழன்:
சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடு அவரது அரசியல் நாடகம் என்றே சொல்ல வேண்டும். சுதந்திர தினத்தில் வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பை எடுத்துவிட்டு நரேந்திர மோடி செயல்பட்டதற்காக அவர் எளிமையானவர், ஆடம்பரத்தை விரும்பாதவர் என்று கொள்ளக்கூடாது. அவர் தினசரி கோடிக்கணக்கில் செலவிட்டே வாழ்ந்து வருகிறார்.
இப்போது சுதந்திர தினத்தில் அவரின் செயல்பாடு என்பது அவரது அரசியல் நாடகம் என்றே சொல்ல வேண்டும். இந்த நாடகம் நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்குமே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
வரவேற்கத்தக்கது:
மும்பை - மாநகர முன்னாள் ஆணையர் சிவானந்தம்:
மோடி சாதாரண மேடையில் நின்று பேசியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இது அவருடைய தைரியத்தையும் மனோபலத்தையும் காட்டுகிறது. நாட்டு மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க விரும்புவதையே இது காட்டுகிறது. எதிர்காலங்களிலும் இதை கடைப் பிடிக்க முடியுமா என்பது கேள்விக் குறியான விஷயம்.
மதுரை - எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த டி.ராஜேந்திரன்:
நம் நாட்டில் தலைவர்களின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகையே பல கோடிகள் ஆகின்றன. மோடியின் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இனிவரும் பிரதமர்களும் இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும். பிரதமரின் சுதந்திர தின உரை ரசிக்கத்தக்கதாக இருந்தது.