இந்தியா

காஷ்மீரின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் பதவியேற்பு

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுநராக இருந்த என்.என்.வோரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டார். ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் 13-வது ஆளுநராக சத்யபால் மாலிக் பதவியேற்றார்.

அவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளின் மூத்த தலைவர்கள், ராணுவ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக கடந்த ஜூன் மாதம் வாபஸ் பெற்றதையடுத்து, அரசு கவிழ்ந்தது. மாநிலத்தில் இப்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

சத்யபால் மாலிக் ஏற்கெனவே பிஹார் ஆளுநராக இருந்தார். உ.பி.யின் மீரட் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்து, 1974-ல் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பாரதிய கிரந்திதள் கட்சி சார்பில் பக்பத் தொகுதி எம்எல்ஏ ஆனார்.

1984-ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். 1988-ல் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்தில் சேர்ந்து 1989-ம் ஆண்டு அலிகார் தொகுதி எம்பி ஆனார். 2004-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அக்கட்சியின் விவசாய பிரிவான கிசான் மோர்ச்சாவில் பொறுப்பாளராக சத்யபால் மாலிக் பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT