பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் மத்தியில் நரேந்திர மோடி உரையாற்றுவது இதுவே முதல்முறை.
ஐ.நா. அமைப்பின் கொள்கை திட்டமிடும் அமைப்பான பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் உரையாற்றவுள்ளவர்கள் என தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலை ஐ.நா. வெளியிட்டது. செப்டம்பர் 27-ம் தேதி ஐ.நா. பொதுச் சபையின் 69-வது கூட்டத்தொடரில் நடக்கும் பொது விவாதத்தில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றுவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிபர்கள், பிரதமர்கள், வெளியுறவு அமைச்சர்கள் உரையாற்றுவார்கள். இந்த விவாதம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொது விவாதம் நடக்கும் ஒரு வாரம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
இவர்கள் தவிர பல்வேறு சமூக தலைவர்களும், தொழிலதிபர்களும் ஐ.நா. தலைமையகத்துக்கு வருகிறார்கள். உலக நெருக்கடிகள் பற்றி இதில் விவாதிக்கப்படும்.
வழக்கமான நடைமுறைப்படி பிரேசில் தலைவர்தான் முதல் பேச்சாளராக இருப்பார். அவருக்கு அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றுவார்.
மோடி உரையாற்றும் அதே தினத்தில் வங்கதேசம், சீனா, ரஷ்யாவின் தலைவர்களும் உரையாற்றுவார்கள். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் செப்டம்பர் 25-ம் தேதி உரையாற்றுவார்.
பொதுச்சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி, இதே பயணத்தில் வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை முதன் முறையாக சந்திக்கிறார். பிரதமராக பதவி
யேற்ற பிறகு மோடி முதலாவதாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் பூடான் ஆகும். அதன் பின்னர் கடந்த மாதம் பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றார். 2 நாள் பயணமாக நேபாளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார்.
அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் மோடி மேற்கொள்ளும் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணத்தில் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் மோடி உலகத் தலைவர்களை சந்திக்கிறார். ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனையும் சந்தித்துப் பேசுவார்.-பிடிஐ