ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினைவாதிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அரசியல் சாசன சட்டத்தின் 35ஏ பிரிவின்படி, நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் அசையா சொத்துகளை வாங்க முடியாது. இந்த சட்டப்பிரிவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இந்தப் பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில், நேற்றும் இன்றும் என 2 நாட்கள் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட் டத்துக்கு பிரிவினைவாத அமைப்பு கள் அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தும் முடங்கியது.
ரயில் போக்குவரத்தும் 2 நாட் களுக்கு ரத்து செய்யப்பட் டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர் அதி காரிகள் தெரிவித்தனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி போராட்டம் அமைதியாக நடைபெறு வதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஜம்மு முகாமிலிருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரையும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். அதே நேரம், பல்தால் மற்றும் பஹல் காம் முகாம்களிலிருந்து யாத்திரை செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதால், இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மாநில அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் மாநிலத்தின் முக்கிய கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை, இந்த சட்டப்பிரிவுக்கு ஆதரவாக கடந்த சில வாரங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.