புதுடெல்லி: இண்டியா கூட்டணியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்டும் என்று அக்கட்சி எம்எல்ஏ ரவிதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மத்திய லக்னோ தொகுதி எம்எல்ஏ ரவிதாஸ் மல்ஹோத்ரா கூறும்போது, ‘‘பிஹாரில் வாக்குச் சீட்டு அடிப்படையில் தேர்தல் நடந்திருந்தால் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலத்தில் (உ.பி.யில்) தனித்து ஆட்சி அமைக்கும் திறனுள்ள கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. இண்டியா கூட்டணியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்டும்” என்றார்.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேர்தலுக்கு முன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரை உரிய பலனை அளிக்கவில்லை.
கடந்த மக்களவை தேர்தலில் 99 இடங்களில் வென்ற காங்கிரஸ் தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வி அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் இண்டியா கூட்டணியின் தலைமை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.