புதுடெல்லி: ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை வெளிட்டுள்ளார்.
ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், புனித ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் மொத்தம் 54 பேர், ஹைதராபாத்தில் இருந்து கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 9-ம் தேதி இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரையை தொடங்கினர்.
இந்நிலையில்தான் இந்த கோர விபத்து இன்று நடந்துள்ளது.
இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் ஆணையர் சஜ்ஜனார் கூறியது: “மெக்காவில் அனைவரும் பிரார்த்தனைகள் செய்து முடித்து விட்டு மதினாவுக்கு ஒரு சுற்றுலா பேருந்தில் செல்ல தீர்மானித்தனர். ஆனால், இதில் 4 பேர் மட்டும் மெக்காவிலேயே தங்கி விட்டனர். பேருந்தில் இடம் இல்லாத காரணத்தால் எஞ்சிய 4 பேர் காரில் மதினாவுக்கு சாலை மார்க்கமாக சென்றனர். மொத்தம் 46 பேர் மதினாவுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
மதினாவுக்கு 25 கி.மீ முன்னதாக இவர்கள் சென்ற பேருந்து, எதிரே வந்த டீசல் டேங்கர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது நடந்த இந்த விபத்தில், பேருந்து முழுவதும் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது.
அந்த பேருந்தில் இருந்து வெளியே வர அவர்கள் முயற்சித்தும் பலனின்றி போனது. இந்த கோர விபத்தில் 45 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். அப்துல் ஷோயப் எனும் ஒருவர் மட்டுமே உயிர் தப்பி உள்ளார். அவரும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் இந்த பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை வெளிட்டுள்ளார். அதில், ‘மெக்கா - மதினா புனித பயணம் மேற்கொண்ட 45 இந்திய இஸ்லாமியர்கள் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள நம் நாட்டின் தூதரகத்தினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தேவைப்பட்ட உதவிகளை செய்து வருகின்றனர். நம்முடைய அதிகாரிகளும் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்யுமாறு பேசி உள்ளனர்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.