இந்தியா

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தச் சூழலில், ரகோபூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற தேஜஸ்வி யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்துக்குள் நிலவும் சண்டைக்கு மத்தியில் தேஜஸ்வி யாதவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி யாதவ் தன்னை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக நேற்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், புதிய அரசு அமைப்பதற்கு முன்னதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ராஜினாமாவை மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் இன்று சமர்ப்பித்தார். இதன் தொடர்ச்சியாக, நிதிஷ் குமார் வரும் வியாழக்கிழமை 10-வது முறையாக முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது.

பிஹார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது, பாஜக 89 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜேடியு 85 இடங்களையும், எல்ஜேபி (ஆர்வி) 19 இடங்களையும், எச்ஏஎம் 5 இடங்கள் மற்றும் ஆர்எல்எம் 4 இடங்களையும் வென்றது.

SCROLL FOR NEXT