புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார். அங்கு சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் நபி தலைமறைவானார். இதன்பிறகு ஹரியானாவின் நூ நகரில் அவர் 10 நாட்கள் பதுங்கி இருந்துள்ளார்.
அங்கு ஹிதாயத் காலனியில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்து உள்ளார். இந்த வீடு, அல் பலா மருத்துவமனை ஊழியர் சோகிப்பின் உறவினர் வீடு ஆகும். சோகிப் கைது செய்யப்பட்டு உள்ளார். வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம்.
கடந்த 9-ம் தேதி நூ நகரில் இருந்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரில் மருத்துவர் உமர் நபி புறப்பட்டு உள்ளார். அங்குள்ள ஏடிஎம் மையத்துக்கு முகத்தை மூடியபடி சென்றுள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரம் செயல்படாததால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. பின்னர் வேறொரு ஏடிஎம் மையத்துக்கு சென்று பணம் எடுத்துள்ளார். நூ நகரில் இருந்து நேரடியாக டெல்லிக்கு வந்து கார் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தி உள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அடுத்தடுத்து மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் மட்டுமன்றி உத்தர பிரதேசம், ஹரியானாவில் பணியாற்றும் மருத்துவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். குறிப்பாக காஷ்மீரை சேர்ந்த சுமார் 200 மருத்துவர்கள் உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு நேரடி தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.